பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு
இலங்கை
சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தில் நிதி முறைகேடு தொடர்பான சம்பவம் ஒன்றில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் பிரிவிற்கு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (17) உத்தரவிட்டார்.
நிதி முறைகேடு தொடர்பான நீதிவான் விசாரணை இன்று (17) நீதிமன்றத்தில் மீண்டும் கூடியபோது, நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இச்சம்பவத்தில் மூன்றாவது சந்தேக நபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127 ஆவது பிரிவின் கீழ் இரகசிய வாக்குமூலம் அளிக்கத் தமது விருப்பத்தைத் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டில் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு விளம்பர நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபா நிதியை ஊவா மாகாண சபைத் தேர்தலின்போது 12,000 டி-ஷர்ட்டுகளை விநியோகிக்கப் பயன்படுத்தப்பட்டதால், அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாக சிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் ரூமி ஜாஃபரை, தலா ரூ. 10 லட்சம் பெறுமதியான இரண்டு தனிநபர் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதோடு, வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்தார்.
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த வழக்கு ஒக்டோபர் 14 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.






















