• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடுரோட்டில் நடந்த கொடூர கொலை முயற்சி - பிரிட்டன் பிரதமர் கண்டனம்

வடக்கு அயர்லாந்தின் தலைநகரான பெல்ஃபாஸ்டில் (Belfast) உள்ள கின்னார்ட் அவென்யூ பகுதியில், நடுரோட்டில் வைத்து நபர் ஒருவரை கொடூரமான முறையில் கத்தியால் வெட்டி, அவரது தலையைத் துண்டிக்க முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 8 திங்கட்கிழமை இரவு 10:30 மணியளவில் அரங்கேறிய இந்தக் கொடூரத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சம்பவம் தொடர்பில் சூடான் நாட்டைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க புலம்பெயர்ந்த நபர் ஒருவர் கொலை முயற்சி வழக்கின் கீழ் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், பொதுமக்களின் உதவியோடு அந்தச் சதிகாரனை மடக்கிப் பிடித்தனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரைத் தாக்கி அவரது கழுத்தை அறுக்க முயன்ற ஆயுததாரியை, அங்கிருந்த தைரியமிக்க பொதுமக்கள் சிலர் சூழ்ந்து கொண்டு தடுத்துள்ளனர்.

உள்ளூர் நபர் ஒருவர் ‘ஹர்லிங் ஸ்டிக்’ (Hurling Stick) எனப்படும் விளையாட்டுக் கம்பியால் அந்தத் தாக்குதல்தாரியை அடித்து வீழ்த்தி, பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபரின் முகம், கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் மிகக் கடுமையான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆரம்பத்தில் குற்றவாளி சோமாலியா நாட்டைச் சேர்ந்தவர் என்று காவல்துறையினரால் தவறாகக் கூறப்பட்ட நிலையில், பின்னர் அவர் சூடான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், வடக்கு அயர்லாந்தில் தற்காலிகமாகத் தங்குவதற்கான அனுமதியைப் பெற்றிருந்தவர் என்பதும் போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்குப் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் வடக்கு அயர்லாந்தின் அரசியல் தலைவர்கள் அனைவரும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

“நமது நாட்டுத் தெருக்களில் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். அதேவேளை பொதுமக்கள் யாரும் வன்முறை வீடியோக்களைப் பகிர வேண்டாம் என்றும், அமைதி காக்குமாறும் பெல்ஃபாஸ்ட் காவல்துறை அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது
 

Leave a Reply