• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர்., சாமி! - எல். முருகராஜ்... உலகம் சுற்றும் வாலிபன்...

சினிமா

துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள,ஸ்ரீ வைகுண்டம் கோவிலின் சிறப்பு பற்றி, வந்திருந்த பக்தர்களுக்கு மிகப் பிரமாண்டமாக விளக்கம் அளித்து கொண்டிருந்தார், கோவிலின் பரம்பரை ஸ்தானிகர்களில் ஒருவரான, 76 வயது ராஜப்பா வெங்கடாச்சாரி.
மீண்டும் பயமுறுத்திக் கொண்டு இருக்கும், 'கொரோனா' தோற்றத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, முன் எச்சரிக்கையாக, தன் முகத்தில், 'மாஸ்க்' அணிந்திருந்தார்.
அந்த, 'மாஸ்க்'கின் ஓரத்தில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., படம் இருந்தது. அதுகுறித்து விசாரித்த போது, நிறைய சுவராசியமான தகவல்கள் கிடைத்தன.

அவர் ஒரு தீவிர எம்.ஜி.ஆர்., ரசிகர். எம்.ஜி.ஆர்., நடித்து வெளியான, 134 படங்களையும் பார்த்துள்ளார். இதில், பெரும்பாலான படங்கள், முதல் நாள், முதல் காட்சியில் பார்த்தவர்; ஒவ்வொரு படத்தையும் திரும்ப திரும்ப பார்க்க கூடியவர்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தை மட்டும் இதுவரை, 252 முறை பார்த்துள்ளார். அந்த படத்தின் முதல் நாள், முதல் காட்சிக்கான டிக்கெட் கட்டணம், 40 காசு; அந்த டிக்கெட்டை இன்னும் பத்திரமாக வைத்துள்ளார்.
இது போக எம்.ஜி.ஆரின். 119 படங்களின், சி.டி.,களையும் வைத்துள்ளார். அவற்றையும் திரும்ப திரும்ப போட்டு, ரசித்து பார்க்கிறாராம்.
எம்.ஜி.ஆரின் ஏதாவது ஒரு படத்தை பற்றி சொன்னால் போதும். அந்தப் படம் எந்த ஆண்டு வந்தது, இயக்குனர் யார், இசை அமைப்பாளர் யார் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும், மடமடவென, மனப்பாடமாக சொல்கிறார். இப்படி அனைத்து எம்.ஜி.ஆர்., படங்களின் விவரமும் அவருக்கு அத்துபடி.
நாடோடி மன்னன் படம், முதலில் சென்னையில் மட்டுமே வெளியானதாம். அந்தப் படத்தை பார்ப்பதற்காகவே சென்னை வந்திருக்கிறார்.
அவரது திருமணத்திற்கு முதல் நாள், 'இதோ வந்து விடுகிறேன்...' என்று, சொல்லிவிட்டு, அன்று வெளியான, நாளை நமதே படம் பார்க்க போய் விட்டார். இங்கே மாப்பிள்ளையைக் காணோம் என்று, எல்லாரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கிய போது, அவருக்கு ஆதரவாக, 'தினமலர்' இதழ் மட்டுமே இருந்ததால், அன்று முதல், 'தினமலர்' மட்டுமே வாங்கிப் படித்தவர், கடந்த, 51 ஆண்டுகளாக, 'தினமலர்' வாசகராக இருந்து வருகிறார்.
எம்.ஜி.ஆரை இரண்டு முறை துாரத்தில் இருந்தும், ஒருமுறை அருகில் சென்று பேசும் சந்தர்ப்பமும் கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறார்.
எம்.ஜி.ஆர்., இறந்து, 36 ஆண்டுகளாகிறது. இன்று வரை, அவர் மறைந்த நாளில் மவுன விரதம் இருந்து வருகிறார். தினமும் காலை, வீட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., படத்தை கும்பிட்டு விட்டு தான், மற்ற வேலைகளை கவனிக்கிறார்.
அரசு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக சேர்ந்து, வட்டார வளர்ச்சி அதிகாரியாக உயர்ந்து, பணி ஓய்வு பெற்றவர். இவரது மூதாதையரை தொடர்ந்து தற்போது, கோவில் விசேஷங்களை கவனிக்கிறார். இதுதவிர, ஓய்வூதிய சங்க தலைவராகவும் இருக்கிறார்.
உள்ளூரில் இலவச கண் மருத்துவ முகாம் நடத்துவது உள்ளிட்ட, பொதுமக்களுக்கு நலன் தரும் விஷயங்களில் ஈடுபட்டுள்ளார். இவரது இயற்பெயரான ராஜப்பா வெங்கடாச்சாரி என்றால் யாருக்கும் தெரியாது. ஆனால், எம்.ஜி.ஆர்., சாமி என்றால், எல்லாருக்கும் தெரியும்.
உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியாகி, 50 ஆண்டுகள் நிறைவடைந்ததால், சென்னையில், மே 7ம் தேதி,- இன்று விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் இவரை சிறப்பு விருந்தினராக அழைத்து, கவுரவிக்கிறார்கள், எம்.ஜி.ஆர்., ரசிகர்கள்.
எல். முருகராஜ்
 

 

Leave a Reply