உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- சுரேஷ் சலே சம்பந்தப்பட்டிருந்தாலும் அன்று சரியாகச் செயலாற்றியிருந்தால் இன்று பிரச்சினை இல்லை – சட்டத்தரணி மைத்திரி குணரத்ன
இலங்கை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிவதில் நிலவும் குளறுபடிகள் மற்றும் பாதுகாப்புத் துறையின் பலவீனங்கள் குறித்து பிரபல சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தாக்குதல் நடப்பதற்கு 21 நாட்களுக்கு முன்பே, குறிப்பிட்ட ஒரு நாளில் இவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அரச புலனாய்வுச் சேவைக்கு துல்லியமான தகவல் கிடைத்திருந்தது என்று சுட்டிக்காட்டிய அவர், புலனாய்வுப் பிரிவினர் அந்தத் தகவலை பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பியிருந்ததாகவும், அவர் மூலமாக அது அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், பொலிஸ் மா அதிபர் அந்த முக்கிய கோப்பை வெறும் “தகவலுக்காக” (For your information) எனக் குறிப்பிட்டு கீழ்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தாரே தவிர, எந்தவொரு தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருந்ததாக எழும் வாதங்களை தர்க்கரீதியாக அணுகிய மைத்திரி குணரத்ன, சுரேஷ் சலே இந்தத் தாக்குதலுக்கான திட்டத்தை தீட்டியதாகவே ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளரும் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்திருந்தால் இந்தத் பேரழிவைத் தடுத்திருக்கலாம் என்றார்.
தற்போதைய ‘தேசிய மக்கள் சக்தி’ அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி உண்மைகளை வெளிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும், தற்போது சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் இந்தத் தாக்குதலின் “மகா சூத்திரதாரி” (Mastermind) என அடையாளப்படுத்தப்படுபவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் எந்தவொரு தனிப்பட்ட “மகா சூத்திரதாரியும்” இல்லை என்றும், இது முழுக்க முழுக்க நாட்டின் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்ட “பாதுகாப்பு குறைபாடு” மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றின் விளைவே என்றும் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.























