மலையகத்தில் ஐஸ் போதைப்பொருள்விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
இலங்கை
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாலை சுமார் 6.30 மணியளவில், பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மன்றாசி நகரில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களின் வாழ்க்கையையும் சமூகத்தின் நலனையும் பாதிக்கும் வகையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குறித்த இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாந்த பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவின் சிறப்பு நடவடிக்கையினால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று காலை 11 மணியளவில் அக்கரப்பத்தனை பொலிஸார் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் உள்ள மோப்ப நாய் ஒன்றினை கொண்டுவரப்பட்டு. ஐஸ் போதை பொருள் விற்ற கடையிலே விசேட பரிசோதனை மேற்கொண்டனர்.
அத்தோடு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மன்றாசி பிரதேசத்தை சேர்ந்தவர் மற்றொரு நபர் நோர்வூட் பகுதியை சார்ந்தவர் என தெரியவருகிறது.
போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர் .























