• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கைவிடப்படும் கப்பல்களால் அதிகம் பாதிக்கப்படுவது இந்திய மாலுமிகள்

உலகளவில் கைவிடப்படும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவற்றில் பணியாற்றும் இந்திய மாலுமிகளே அதிகளவில் பாதிக்கப்படுவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கப்பல் நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கும்போது அல்லது கப்பல் உரிமையாளர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்புபட்டு கைது செய்யப்படும் சூழ்நிலைகளில், பல கப்பல்கள் நடுக்கடலில் கைவிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால், கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகள் உணவு, தண்ணீர் மற்றும் சம்பளம் இன்றி கடுமையான இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.

சர்வதேச போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டு உலகளவில் 410 கப்பல்கள் கைவிடப்பட்டதுடன், அவற்றில் பயணித்த 6,223 மாலுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் இந்திய மாலுமிகளே அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 1,125 இந்திய மாலுமிகள் கைவிடப்பட்டதாகவும், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 32 சதவீதம் அதிகரிப்பாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகிற்கு அதிகளவில் மாலுமிகளை வழங்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், இந்தத் தகவல் இந்திய கடல்சார் துறையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய சம்பவமாக, Azra C என்ற சரக்கு கப்பல் இஸ்தான்புல் கடற்பகுதியில் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தக் கப்பலில் இருந்த நான்கு இந்திய மாலுமிகள் சுமார் 10 மாதங்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கப்பலின் உரிமையாளர்கள் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாலுமிகளின் நிலைமை மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, மாலுமிகளை ஏமாற்றும் மற்றும் விதிமுறைகளை மீறும் கப்பல் நிறுவனங்கள் மற்றும் கப்பல்களை கருப்புப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply