கியூபாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டரில் 6.1-ஆக பதிவானதால் மக்கள் அச்சம்
மேற்கு கியூபா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஹவானா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் யாருக்கும் காயங்களோ அல்லது கட்டிட மற்றும் பொருட் சேதங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, தலைநகருக்கு மேற்கே உள்ள கடற்பகுதியில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
"இங்குள்ள அனைவரும் நலமாக இருக்கிறார்கள். "தெருவில் உள்ள மக்கள் சற்று பயந்துள்ளனர்," என்று பினார் டெல் ரியோவில் உள்ள பினார் டெல் ரியோ ஹோட்டலின் மேலாளரான ஃபிளாவியா பூபோ தெரிவித்தார்.
சமீபத்திய நிலநடுக்கம் புளோரிடா வரை உணரப்பட்டது. மியாமியில் உள்ள தேசிய வானிலை சேவை, மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் பல நில அதிர்வு அறிக்கைகள் கிடைத்ததாக ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
ஓரியன்டே புவிப்பிளவு மண்டலம் கியூபாவின் தென்கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ளது. இது சமீபத்திய நூற்றாண்டுகளில் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அவற்றுள், 2020 ஜனவரியில் திறந்த கடற்பரப்பில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் அடங்கும். அந்த நிலநடுக்கம் கியூபா மற்றும் கேமன் தீவுகளில் சேதத்தை விளைவித்தது.























