துபாய் சாலை விபத்தில் 7 இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள தொழில் நகரமான துபாயில் நேற்று நடந்த சாலை விபத்தில் சிக்கி 7 இந்திய தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய லாரி, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையின் நடுவே நின்றுகொண்டிருந்தது.
அதே நேரத்தில் இந்திய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பின்னால் வந்துகொண்டிருந்த ஒரு மினி பேருந்து, எதிர்பாராதவிதமாக அந்த லாரியின் பின்பகுதியில் மிக பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காததே இந்த விபத்திற்கு காரணம் என்று துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.
7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 9 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களில் 5 தொழிலாளர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், மீதமுள்ள 4 பேருக்கு லேசான காயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் துபாய் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்துக்கு துபாய் இந்திய தூதரேம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "விபத்து குறித்து அறிந்ததும் இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து விதமான மருத்துவ மற்றும் சட்ட உதவிகளையும் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து தூதரகம் மேற்கொண்டு வருகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 7 இந்திய தொழிலாளர்களின் உடல்களையும் விரைவில் தாயகத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளையுஇந்திய தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
























