• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரனின் செர்னோபில் அணுக்கழிவு சேகரிப்பு தளம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் - கதிர்வீச்சு அபாயம்

உக்ரனின் வடக்குப்பகுதியில் செர்னோபில் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. உக்ரைன் சோவியத் யூனியனில் இருந்த சமயத்தில் 1986 ஏப்ரல் 26 அன்று இங்குள்ள ஒரு அணு உலையில் திடீர் விபத்து ஏற்பட்டது.

இதானால் ஏற்பட்ட கதிர்வீச்சு காரணமாக உலை அமைந்துள்ள 30 கி.மீ சுற்றளவு பகுதி மக்கள் வாழத் தகுதியற்ற ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டது. கதிர்வீச்சு காரணமாக பலருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த பகுதி தற்போதும் தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் செர்னோபிலில் அணுக்கழிவுகளை சேகரித்து வைக்கும் கட்டிடத்தின் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அங்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

தாக்குதலைத் தொடர்ந்து சுமார் 40 சதுர மீட்டர் பரப்பளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலின் போது சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்குள் அணுக்கழிவுகள் எதுவும் சேமித்து வைக்கப்பட்டிருக்கவில்லை.

இதனால் அங்கு கதிர்வீச்சு அபாயம் எதுவும் ஏற்படவில்லை என்றும், கதிர்வீச்சின் அளவு வழக்கம் போல சீராகவே உள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, "சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு விதிகளை மாஸ்கோ தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. இது மிகவும் கீழ்த்தரமான மற்றும் திட்டமிட்ட தாக்குதல்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரபேல் குரோசி, "அணுக்கழிவுகள் சேமிக்கப்பட்டுள்ள இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தீவிர கவலை அளிக்கிறது.

போர்க் காலத்திலும், அணுசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சேதங்களை ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழு விரைவில் செர்னோபில் அனுப்பப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதனிடையே உக்ரைனின் பிற பிராந்தியங்களிலும் ரஷியா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.


 

Leave a Reply