சர்வதேச அரசியலில் புதிய சர்ச்சை - டிரம்புக்கு ஈரான் அமைச்சர் அறிவுரை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் தலைமையுடன் சந்திப்பு நடத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், அதற்கான வாய்ப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நிராகரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் அண்மையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த டிரம்ப், ஈரானுடன் நிரந்தர அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால், அந்நாட்டின் புதிய உச்ச தலைவரைச் சந்திக்கத் தயக்கம் இல்லை என்று கூறியிருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான ஒப்பந்தம் உருவாகும் பட்சத்தில், அந்தச் சந்திப்பை பெருமையாகக் கருதுவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, டிரம்ப் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். “டிரம்ப் எங்களைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக வரும் செய்திகளைப் பார்த்தேன்.
நாம் யதார்த்தமாக சிந்திக்க வேண்டும். உண்மையான உலகில் வாழ வேண்டும். இதுவரை பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, மத்தியஸ்தர்கள் ஊடாக இரு தரப்பினரும் தொடர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய போர் மற்றும் பாதுகாப்புச் சூழ்நிலைகள் காரணமாகவே ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பொதுவெளியில் அதிகம் தோன்றவில்லை என்றும், நாட்டின் முக்கிய தீர்மானங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஈரான் – அமெரிக்க உறவுகள் தொடர்பான அண்மைய முன்னேற்றங்கள் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன.






















