தொழில்நுட்பக் கோளாறால் 60 பேருக்கு இலவசமாகக் கிடைத்த FIFA டிக்கெட்டுகள்
உலகக் கால்பந்து சம்மேளனத்தின் ( FIFA ) உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளை 60 பேர் இலவசமாக பெற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விலையில் இலவசமாகப் பெற்றுக்கொண்ட சுமார் 60 ரசிகர்களின் டிக்கெட்டுகளை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய அந்த அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்யும் வழிமுறையின் போது பணம் செலுத்தும் கட்டமைப்பு முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே டிக்கெட்டுகள் இலவசமாக அந்த ரசிகர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக FIFA நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
அந்த நுழைவுச்சீட்டுகள் தற்போது அவர்களுக்காக தற்காலிகமாக ஒதுக்கீடு செய்து வைக்கப்பட்டுள்ளதுடன், 7 நாட்களுக்குள் அதற்குரிய முழுமையான தொகையைச் செலுத்தி அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறு FIFA நிறுவனம் சம்பந்தப்பட்ட ரசிகர்களுக்கு அறிவித்துள்ளது.
அந்த காலப்பகுதிக்குள் பணம் செலுத்தத் தவறினால், குறித்த ஒதுக்கீடுகள் முழுமையாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டு உபசரிப்பில் ஜூன் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணத் தொடரின் நுழைவுச்சீட்டுகளின் விலைகள் மிக உயர் மட்டத்தில் காணப்படுவதாகவும், அதன் விலை மனுக் கோரல் நடைமுறைகளில் சிக்கல்கள் இருப்பதாகவும் சர்வதேச ரீதியில் ஏற்கனவே கடுமையான விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.
இதேவேளை, இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து FIFA நிறுவனம் தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.





















