அதே அன்பு காட்டியதில் மகிழ்ச்சி - முதல்வர் விஜய்யை சந்தித்த எம்எஸ் பாஸ்கர் பேட்டி
சினிமா
சின்னத்திரை மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கர். நடிப்பு மட்டுமின்றி டப்பிங்கிலும் தனி முத்திரை பதித்தவர். குணச்சித்திரம், காமெடி என தான் நடிக்கும் கதாபாத்திரங்களை மக்கள் மனதில் எளிதில் மறைந்து போக முடியாத அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர்.
பார்க்கிங் திரைப்படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து இருந்தது. இந்த நிலையில், நடிகர் எம்.எஸ். பாஸ்கர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழ்நாடு முதல்வராகி இருக்கும் விஜய்க்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் தினமும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், நடிகர் எம்.எஸ். பாஸ்கர் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிலையில், அவருடனான சந்திப்பு குறித்து பேட்டியளித்தார்.
அப்போது பேசிய நடிகர் எம்.எஸ். பாஸ்கர், "முதலமைச்சர் விஜய்யை 2 நிமிடம் சந்திக்க நினைத்தேன், ஆனால் 20 நிமிடங்கள் பேசினேன். 'பார்க்கிங்' படத்தில் எனது நடிப்பை விஜய் பாராட்டியதுடன், தேசிய விருது பெற்றதற்கும் வாழ்த்து தெரிவித்தார்.
என் மனைவி உங்கள் தீவிர ரசிகை.. தவெக முன்னிலை செய்தி வந்தபோது இனிப்பு வழங்கினார்' என்று அவரிடம் கூறியபோது, உடனே அவருடன் விஜய் தொலைபேசியில் பேசினார். நடிகராக இருந்தபோது காட்டிய அதே அன்பும் மரியாதையும், முதல்வராக இருக்கும் போதும் விஜய் காட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது," என்று தெரிவித்தார்.






















