பிள்ளையானை நேரில் சந்தித்தது ரகசியமானது அல்ல – நாமல் ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவிப்பு
இலங்கை
கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானை நேரில் சென்று சந்தித்திருந்தாகவும் அந்த சந்திப்பு இரகசியமானது அல்ல என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் பிரான்ஸ் வரை பயணித்ததாகக் கூறப்படுகின்ற விடயமானது அரசாங்கத்தின் முன்னுரிமைகள் தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையானை சந்தித்ததை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே அதிகாரிகள் அவ்வளவு தூரம் பயணித்திருக்கிறார்கள் என்றால், அது நிச்சயமாக பொதுப் பணத்தை வீணடிக்கும் ஒரு செயலாகும் என்றும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் அரசியல் நாடகத்தை தவிர்த்து, முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமாயின் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு சிறையில் இருந்த பிள்ளையானை மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நேரில் சென்று சந்தித்ததாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலிப பீரிஸ் கொழும்பு டே;டை நீதிவான் நீதிமன்றில் நேற்று அறிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பாகவே தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் நாமல் ராஜபக்ச இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அத்துடன் தனக்குத் தெரிந்தவரை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பிள்ளையான் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை என்றும்அவ்வாறு இருக்க, இவ்வாறான ஊடக நாடகங்கள் மூலம் அரசாங்கம் யாரைத்தான் திருப்திப்படுத்த முயற்சிக்கின்றது என்றும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.





















