ஜன நாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த விஜய் ஆண்டனி
சினிமா
ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளப் படம் ஜன நாயகன்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
இப்படம்தான் நடிகர் விஜய்யின் கடைசிப் படம் எனக் கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின்மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படம் கடந்த ஜனவரி 9 அன்றே வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தற்போதுவரை வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் என்றும் தெரியவில்லை. இச்சூழலில் இப்படத்தின் காட்சிகள் சில இணையத்தில் கசிந்துள்ளன. தொடர்ந்து பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சியில் உள்ளது. இந்நிலையில் இந்த செயல் வருத்தமளிப்பதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“ஜனநாயகன் திரைப்படம் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானதை எண்ணி வருத்தமாக இருக்கிறது.
படம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் போது, அனைவரும் சட்டபூர்வமான தளங்கள் வாயிலாகப் பார்த்து ஆதரவளிக்குமாறு மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.






















