மௌனம் எதை குறிக்கிறது? - போர்நிறுத்தம் உண்மையா? குழப்பத்தில் சர்வதேச சமூகம்
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே இரண்டு வார கால போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், இது குறித்து இஸ்ரேல் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது.
ஜோர்தானின் அம்மானில் இருந்து சர்வதேச ஊடகவியலாளர் ரோப் மெக்பிரைட் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு,
இஸ்ரேலிய ஊடகங்களில் கசிந்துள்ள தகவல்களின்படி, அமெரிக்க அதிகாரி ஒருவர், "இந்த போர்நிறுத்த உடன்பாட்டை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இஸ்ரேலிய அரசாங்கமோ அல்லது பிரதமர் அலுவலகமோ இதனை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இந்த மௌனம் சர்வதேச அரங்கில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே ஓமான் போன்ற நாடுகள் முன்னெடுத்த அமைதிப் பேச்சுவார்த்தைகளை இஸ்ரேல் கடுமையாக எதிர்த்து வந்தது.
குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகி, ஈரான் மீது நேரடி இராணுவ நடவடிக்கையை எடுக்குமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழுத்தம் கொடுத்து வந்ததாகக் கருதப்படுகிறது.
கடந்த வார இறுதியில் அமெரிக்க விமானிகளை மீட்டதற்காக ட்ரம்ப்புக்கு வாழ்த்துத் தெரிவித்த நெதன்யாகு, "ஈரானுடன் முடிக்கப்படாத சில காரியங்கள் இன்னும் உள்ளன எனவே போர்நிறுத்தம் இப்போதைக்குச் சாத்தியமில்லை" என மீண்டும் வலியுறுத்தியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், மறுபுறம் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவங்கள் ஈரானின் முக்கிய இலக்குகளைத் தாக்குவதற்கான பட்டியலை (Target List) இறுதி செய்துள்ளன.
கடந்த சில நாட்களாக ஈரானின் முக்கிய பாலங்கள், சாலைகள் மற்றும் தொடருந்துக் கடவைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், இஸ்ரேல் ஏற்கனவே தனது திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டதையே காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இஸ்ரேலின் தற்போதைய மௌனம் என்பது உண்மையிலேயே அவர்கள் அமைதியை நாடுகிறார்களா? அல்லது போர்நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி ஈரானுக்கு எதிரான ஒரு பாரிய தாக்குதலுக்குத் தயாராகிறார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.























