எனக்குள் நீ வாழ்கிறாய்...என்னை விட்டு ஏன் சென்றாய்? - தற்கொலை செய்த டி.வி.நடிகையின் கணவர் உருக்கமான பதிவு...
சினிமா
பிரபல டி.வி. நடிகை சுபாஷினி (வயது 36) சென்னை அய்யப்பன்தாங்கலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் அவர் பெங்களூருவில் உள்ள தனது கணவர் பிபின் சந்திராவுக்கு(38) வீடியோ கால் செய்து பேசிய பிறகு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக போரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சுபாஷினியின் கணவர் பிபின் சந்திரா சமூக வலைதளத்தில் மனைவி மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
உன் ஆத்மா சாந்தி அடையட்டும் போபா. உன்னை போன்று என்னை யாரும் காதலித்தது இல்லை. நான் உன்னை போன்று வேறு யாரையும் காதலித்தது இல்லை. இன்று நீ உயிருடன் இல்லை என்பதையே என்னால் நம்ப முடியவில்லை.
என் நினைவுகளில், எனக்குள் நீ வாழ்கிறாய். நீ இங்கு இருப்பது போன்றே உணர்கிறேன். என்னை விட்டு ஏன் சென்றாய்?. உன் பிறந்தநாள், நம் திருமணநாளை கொண்டாட விரும்புகிறேன். நீ இல்லாமல் நான் இல்லை. அடிக்கடி பயணம் செய்ய வேண்டும் என்று கனவு கண்டோமே பேபி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சுபாஷினியின் வாழ்க்கையில் ஏப்ரல் மாதம் மிக முக்கியமானது ஆகும். இந்த மாதத்தில் வருகிற 12-ந்தேதி சுபாஷினியின் பிறந்த நாள். மேலும் வருகிற 21-ந்தேதி அவரின் 2-வது திருமண நாளாகும்.
இந்த மாதத்தில் சுபாஷினி தற்கொலை செய்தது அவரது கணவர் பிபின் சந்திரா மற்றும் அவரது தோழிகள், ரசிகர்களை நீங்காத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சுபாஷினி இறக்கும் முன்பாக சமூக வலைதளத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக பதிவிட்டிருந்தாராம்.
இப்படிப்பட்ட சுபாஷினியா தற்கொலை செய்தார் என்று ரசிகர்கள் புலம்புகிறார்கள். மேலும் கணவர் பிபின் சந்திராவும், சுபாஷினியும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளத்தில் அதிகமாக பகிர்ந்துள்ளார்.
ஒரு பதிவில் அவர், நான் என் கணவரை கண்களாலே கைது செய்த தருணம் என்று பகிர்ந்திருந்தார். அந்த அளவிற்கு தனது உறவை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் காட்டியவர். குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படங்கள், நண்பர்கள், சீரியல் கூட்டணி நடிகர்களுடன் எடுத்த போட்டோக்கள் அவர் ஒரு மகிழ்வான வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதையே காட்டியது.
இப்படி வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருந்தவர், ஏன் திடீரென இப்படிப்பட்ட முடிவை எடுத்தார்? என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
கடைசியாக மார்ச் 10 அன்று, அவர் தனது கணவரின் வீடியோவைப் பதிவிட்டு, “2 வருடங்களுக்குப் பிறகு... முதல் நாள் போலவே இன்றும் இந்த மனிதர் மீது எனக்குக் காதல் இருக்கிறது” என்று எழுதியிருந்தார். இது நிஜம்தானா அல்லது வாழ்க்கையிலும் நடித்துவிட்டாரா? என்று சுபாஷினியின் ரசிகை ஒருவர் கண்ணீர் விட்டு அழுதார். சுபாஷினியும், கணவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தால், அவர்களுக்குள் பெரிய பிரச்சனை இருந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என பலர் கூறுகின்றனர். இதனால், உண்மையில் என்ன பிரச்சனை நடந்தது, அந்த வீடியோ காலில் என்ன பேச்சு நடந்தது?, ஏன் இப்படியான கடுமையான முடிவை எடுத்தார் என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், முழு உண்மை வெளிவருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். சுபாஷினிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் அவரது தற்கொலை குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்துகிறார்.
சுபாஷினியின் பூர்வீகம் இலங்கை ஆகும். அங்கு இவரது பெயர் ஷாஸ்வி பாலா. சுபாஷினியின் உடல் சென்னை கீழப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து நடிகர், நடிகைகள் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக சுபாஷினியின் உறவினர்கள் தெரிவித்தனர்.























