• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாகவதரின் மீது..எம்.ஜி.ஆர். வைத்திருந்த அன்புக்கும் அவரது பரந்த மனத்துக்கும் இது உதாரணம

சினிமா

எம்.ஜி.ஆர் பிரபலமாவதற்கு முன் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவர் நடித்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 தீபாவளிகளைக் கண்டது. எம்.ஜி.ஆர். மீது பேரன்பு கொண்டவர். எம்.ஜி.ஆருக்கும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் அன்பும் உண்டு. தியாகராஜ பாகவதரின் தலை அலங்காரத்துக்கு ‘பாகவதர் கிராப்’ என்றே பெயர். அவரைப் போலவே எம்.ஜி.ஆரும் ஆரம்ப காலங்களில் ‘பாகவதர் கிராப்’ வைத்துக் கொண்டிருந்தார்.

‘அசோக் குமார்’ படத்தின் கதாநாயகன் தியாகராஜ பாகவதர். அந்தப் படத்தில் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். அந்த வாய்ப்பை எம்.ஜி.ஆருக்கு வாங்கிக் கொடுத்தது பாகவதர்தான். படத்தின் ஒரு காட்சியில் அரசனின் உத்தரவுப்படி தியாகராஜ பாகவதரின் கண்களைத் தளபதியாக நடிக்கும் எம்.ஜி.ஆர். பழுக்கக் காய்ச்சிய கம்பியால் குத்தி குருடாக்க வேண்டும். இயக்குநர் ராஜா சந்திரசேகர் படமாக்கிக் கொண்டிருந்தார். கேமரா ஓடுகிறது.

கம்பியைக் கையில் பிடித்தபடி பாகவதரை நெருங்கிய எம்.ஜி.ஆர். அப்படியே தயங்கி நின்றுவிட்டார். ‘கட்’ சொன்ன இயக்குநர், காரணம் கேட்டார். நடிப்புதான் என்றாலும் கூட, தான் அன்பும் மதிப்பும் வைத்திருக்கும் பாகவதரின் கண்களைக் குருடாக்குவது போல நடிக்க எம்.ஜி.ஆரின் மனம் இடம் தரவில்லை. கலங்கிய கண்களுடன் அப்படியே நின்று விட்டார்.

விஷயம் அறிந்து இயக்குநர் மட்டுமின்றி தியாகராஜ பாகவதரே எவ்வளவோ சமாதானம் சொல்லியும் எம்.ஜி.ஆர். அப்படி நடிக்க மறுத்துவிட்டார். பிறகு, கையில் கம்பியுடன் பாகவதரை எம்.ஜி.ஆர். நெருங்கும்போது, நிரபராதியான தனக்கு தண்டனை வழங்கப்படுவதால் ஆவேசமடைந்த பாகவதர், அந்த கம்பியை எம்.ஜி.ஆரின் கைகளில் இருந்து பிடுங்கி தானே தனது கண்களை குத்தி குருடாக்கிக் கொள்வது போல காட்சி மாற்றப்பட்டது.

திரையுலகில் புகழ்கொடி நாட்டிய தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். வழக்கில் இருந்து மீண்டாலும் கூட சிறை வாழ்க்கை அவரை பற்றற்ற ஞானி போல மாற்றியிருந்தது. பின்னர், அவர் நடித்த சில படங்களும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவரும் படங்களில் நடிப்பதில் ஆர்வமின்றி இருந்தார். கடன்கள் காரணமாக திருச்சியில் அவர் கட்டிய பிரம்மாண்டமான மாளிகை ஏலத்துக்கு வந்தது. அதை மீட்டு பாகவதரிடமே கொடுத்தார் எம்.ஜி.ஆர். வெளியே தெரியாமல் பாகவதருக்கு எம்.ஜி.ஆர். செய்த உதவி இது.

காலங்கள் மாறின. பாகவதர் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். முதல்வராகவும் ஆகிவிட்டார். பாகவதரின் குடும்பம் வறுமையில் வாடுவது குறித்தும் சென்னையில் அவர்கள் வசிப்பது பற்றியும் ஒருநாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்தது.

அந்த நேரத்தில் தியாகராஜ பாகவதர் வாழ்ந்த அதே திருச்சியில் அரசு சார்பில் கலையரங்கம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். செல்கிறார். விழாவுக்கு தியாகராஜ பாகவதர் குடும்பத்தை அழைத்து வருமாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

விழாவன்று மேடையில் பாகவதரின் குடும்பத்தாருக்கு அதிமுக கட்சியின் சார்பில் எம்.ஜி.ஆர். பண முடிப்பு வழங்கினார். அதோடு, அவர்களே எதிர்பாராத வகையில் காலம்தோறும் பாகவதர் பெயர் நிலைக்கும் வகையில், அரசு சார்பில் கட்டப்பட்ட கலையரங்கத்துக்கு தியாகராஜ பாகவதர் மன்றம் என்றும் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டினார். பாகவதரின் குடும்பத்தாருக்கு ஆனந்தக் கண்ணீர். பாகவதரின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் எம்.ஜி.ஆர். வைத்திருந்த அன்புக்கும் அவரது பரந்த மனத்துக்கும் இது உதாரணம.

- தி இந்து

Leave a Reply