• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் - 10 நாட்களுக்கு மூடப்பட்ட அமெரிக்க El Paso விமான நிலையம்

அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்திலுள்ள எல் பாசோ (El Paso) சர்வதேச விமான நிலையம், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இன்று முதல் 10 நாட்களுக்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA), பெப்ரவரி 10ஆம் திகதி இரவு 11:30 மணி முதல் பிப்ரவரி 20ஆம் திகதி இரவு 11:30 மணி வரை எல் பாசோ விமான நிலையத்திற்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் அனைத்து விமானங்களுக்கும் தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்த வான்பரப்பை 'தேசிய பாதுகாப்பு வான்பரப்பு' என அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் வகைப்படுத்தியுள்ளது.

இதற்கான காரணம் 'சிறப்பு பாதுகாப்பு காரணங்கள்' என விபரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது வர்த்தக விமானங்கள், சரக்கு விமானங்கள் மற்றும் பொது விமான போக்குவரத்து என அனைத்திற்கும் பொருந்தும்.

இந்த கட்டுப்பாடுகளை மீறும் விமானிகள் தடுத்து வைக்கப்படுவார்கள் என அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் எச்சரித்துள்ளது.

மேலும், "விமானமானது உடனடி பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கருதப்பட்டால், அமெரிக்க அரசாங்கம் அந்த விமானத்தின் மீது உயிரைப் பறிக்கும் அளவிற்குத் தாக்குதல் (Deadly force) நடத்தக்கூடும்" எனவும் அந்த அறிவிப்பில் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்கு டெக்சாஸ், தெற்கு நியூ மெக்ஸிகோ மற்றும் வடக்கு மெக்ஸிகோ ஆகிய பகுதிகளுக்கான பிரதான நுழைவாயிலாக இந்த விமான நிலையம் விளங்குகிறது.

சவுத்வெஸ்ட், அமெரிக்கன், டெல்டா மற்றும் யுனைடெட் போன்ற முக்கிய விமான நிறுவனங்கள் இங்கிருந்து சேவைகளை வழங்குகின்றன. திடீரென பிறப்பிக்கப்பட்ட இந்த தடையால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

Leave a Reply