கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு - பாரிய போராட்டம்
இலங்கை
சிவில் பாதுகாப்புப் படை (ஊர்காவல் படை) வீரர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, அவர்களின் மனைவியர் பதாதைகளை ஏந்தி இன்று (31) கந்தளாயில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கடந்த மாதம் கந்தளாயில் கடமையாற்றிய சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் பலர் கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தீர்மானத்தினால் தமது குடும்ப வாழ்வாதாரமும், பிள்ளைகளின் கல்வியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து 80-க்கும் மேற்பட்ட மனைவியர் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.
“ஊர்காவல் படை” என்பது அந்தந்த ஊர்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. அதனை விடுத்து, வீரர்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவது படையின் நோக்கத்திற்கே முரணானது.போர் காலங்களிலும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் தத்தமது ஊர்களுக்காகப் பாடுபட்டவர்களை இப்போது தூர இடங்களுக்கு மாற்றுவது நீதியற்றது.
வெளி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை உடனடியாக ரத்து செய்து, வீரர்களை மீண்டும் திருகோணமலை மாவட்டத்திற்குள்ளேயே பணியமர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குறிப்பிட்டனர்
கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை ஆரம்பித்த பெண்கள், பின்னர் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று 87ஆம் கட்டை சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாகமுறைப்பாட்டை முன் வைத்தனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் கந்தளாய் பொலிஸார் பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது






















