• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடந்த வருடம் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 15தற்கொலை சம்பங்கள் பதிவு

இலங்கை

கடந்த வருடம் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 15தற்கொலை சம்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இதில் 13தற்கொலைகளுக்கு கசிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தியுள்ளதாக வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடம் 20வயதுக்குட்பட்ட நான்கு பேர் தற்கொலை செய்துள்ள நிலையில் அதில் மூன்று பேரின் தற்கொலையில் இந்த கசிப்பு தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் மாலை நடைபெற்றது.

பிரதேச அபிவிருத்திக்குழு மீளாய்வு கூட்டமானது மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தியின் ஒழுங்கமைப்பில் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், மண்முனை மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் கோபாலபிள்ளை, பிரதி தவிசாளர் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள்,விவசாய அமைப்புகளின் தலைவர்கள்,பொலிஸார் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கூட்ட ஆரம்பத்தில் கடந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களின் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் முடிவுறுதப்படாத தீர்மானங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் தற்போது அறுவடைகள் ஆரம்பித்துள்ள நிலையில் யானைகளின் அட்டகாசங்கள் காரணமாக பெரும் பாதிப்புகளை எதிர்கொள்வதாக இங்கு விவசாய அமைப்புகளினாலும் பிரதேசசபையின் தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டதுடன் இந்த யானை பிரச்சினையை தடுப்பதற்கு மக்கள் வாழும் பகுதிக்குள் ஊடுருவியுள்ள யானைகளை காட்டு பகுதிகளுக்கு அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
 

Leave a Reply