2026 ஜனவரி மாத வருவாய் இலக்கை விஞ்சியுள்ள சுங்கத் திணைக்களம்
இலங்கை
2026 ஜனவரி மாதத்துக்கான வருவாய் இலக்கினை ஏற்கனவே தாண்டி விட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஜனவரி மாதத்தின் முதல் 22 நாட்களில் இலங்கை சுங்கத் திணைக்களம் வருவாயாக 175.4 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது.
இது குறித்த மாதத்திற்காக எதிர்பார்க்கப்பட்ட இலக்கான ரூ.160.2 பில்லியனை விட 9.5% அதிகமாகும்.
நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட டித்வா சூறாவளி காரணமாக தடைபட்ட கொள்கலன் அனுமதி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டதாலும், 2025 டிசம்பரில் இறக்குமதி நடவடிக்கைகள் அதிகரித்ததாலும் வருவாய் அதிகரிப்பில் பிரதான காரணியாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு சுங்கத் திணைக்களம் மொத்தமாக 2,551 பில்லியன் ரூபாவை வருவாயை அடைந்து.
இது 2024 ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட ரூ.1,553 பில்லியனுடன் ஒப்பிடும்போது 64.2% அதிகமாகும்.
இந்த நிலையில், வாகன இறக்குமதி குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், 2026 ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்காக சுங்கத் திணைக்களம் 2,207 பில்லியன் ரூபாவை நிர்ணயித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவுடன் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ், அரசாங்கத்தின் நிதி இலக்குகளை அடைவதில் திறைசேரிக்கு மிக முக்கியமான பங்களிப்பை வழங்கும் ஒரு நிறுவனமாக சுங்கத்துறை மாறியுள்ளது என்பதை தொடர்புடைய தரவு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.






















