அமெரிக்காவில் பதற்றம்- மினியாபோலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் வீதிக்கிறங்கிய மக்கள்
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் குடியேற்றச் சோதனைகளின் போது, ஒரு மாதத்திற்குள் இரண்டாவது அமெரிக்க குடிமகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
37 வயதான தீவிர சிகிச்சைப் பிரிவு செவிலியர் அலெக்ஸ் ப்ரெட்டி, கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதலின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
அலெக்ஸ் ப்ரெட்டி ஒரு "உள்நாட்டு பயங்கரவாதி" என்றும், அவர் 9MM ரக துப்பாக்கியுடன் முகவர்களைத் தாக்க முயன்றதால் தற்காப்பிற்காகச் சுட்டதாகவும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
எனினும் அலெக்ஸ் தனது கைபேசியில் முகவர்களைப் படம் பிடிப்பது மட்டுமே தெரிகிறது அவரிடம் துப்பாக்கி இருந்ததற்கான எந்த ஆதாரமும் காணொளியில் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அலெக்ஸ் கையில் துப்பாக்கி ஏதும் இல்லை என்றும், அவர் ஒரு கைபேசியை மட்டுமே வைத்திருந்தார் என்றும் நேரில் பார்த்தவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மினியாபோலிஸில் உறைபனியையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அலெக்ஸ் ப்ரெட்டிக்காக நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவுக்கு எதிராக நியூயோர்க், சிகாக்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற முக்கிய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
போராட்டக்காரர்கள் அலெக்ஸிற்கு நீதி வழங்கு மற்றும் ICE பிரிவை ஒழிப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.






















