கனடாவில் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை- பல பகுதிகளில் பாடசாலைகள் மூடல்
கனடா
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் பல பகுதிகளில் 60 செ.மீ.க்கும் அதிகமான பனிப்பொழிவு ஏற்படும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் முன்னறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, இன்று பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலைகள், நிர்வாகக் கட்டடங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களை மூடுவதாக டொரண்டோ மாவட்ட பாடசாலை சபை அறிவித்துள்ளது.
திங்கள்கிழமை நடைபெற இருந்த உயர்நிலைப் பரீட்சைகள் இந்த வாரத்தின் பிற்பகுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
டொரண்டோ கத்தோலிக்க பாடசாலை சபையும் அனைத்து பாடசாலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.
பாடசாலை பேருந்து சேவைகள், குழந்தை பராமரிப்பு, பள்ளிக்கு முன்–பின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை நடைபெற இருந்த பரீட்சைகள் ஜனவரி 29க்கு மாற்றப்பட்டுள்ளன.
ஸெயிண்ட் மைக்கேல்ஸ் கல்லூரி மற்றும் மேபின் பாடசாலை (தனியார் தொடக்கப் பள்ளி) திங்கள்கிழமை முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யோர்க், டர்ஹாம், டஃபரின்–பீல், ஹால்டன், ஹாமில்டன், நயாகரா, பகுதிகளில் இயங்கி வரும் பாடசாலைகளும் பிரெஞ்சு மொழிப் பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.























