• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை

கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும்போது எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் நிபுணர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்துடன் இன்று (21) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

தேசிய கல்வி நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டமைப்பின் மூலம், தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்களை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் (FUTA) இதன்போது எடுத்துரைத்தனர்.

மேலும், புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான தேவையை தங்கள் சங்கம் அங்கீகரிப்பதாகவும், நகர்ப்புற பாடசாலைகளில் உள்ள குழந்தைகளை விட கிராமப்புற பாடசாலைகளில் உள்ள குழந்தைகளுக்கு புதிய கல்வி சீர்திருத்தங்கள் அதிகம் தேவைப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கல்விச் சீர்திருத்தங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எடுத்த முடிவை தங்கள் சங்கம் பாராட்டுவதாகவும், அதற்கு பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

முன்னைய கலந்துரையாடலின் தொடர்ச்சியாக, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகளுக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன. இதன்போது பல்கலைக்கழக அமைப்பையும் கல்வியையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் திருத்தம் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பி.ஆர். வீரதுங்க, துணைத் தலைவர் எம்.ஏ.எம். சமீம், செயலாளர் சாருதத்த இளங்கசிங்க மற்றும் சம்மேளனத்தின் பிற பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply