• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அந்தஸ்துக்காக அரசாங்கம் எவரையும் பாதுகாக்காது – பிரதமர் தெரிவிப்பு

இலங்கை

எவருடைய பதவி அந்தஸ்தையோ அல்லது தராதரத்தையோ கருத்திற்கொண்டு அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை என்றும், தற்போதைய நீதித்துறையின் செயற்பாடுகளின் ஊடாக அது மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்:

2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளித்தபடி, சட்டத்தின் ஆட்சி மற்றும் அனைவருக்கும் சமமான நீதித்துறைக் கட்டமைப்பின் கீழ், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்ட வழக்குகள் தொடர்பில் தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, தகுதியான வழக்குகள் தொடர்பில் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மொத்தம் 102 வழக்குகள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் 65 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

34 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்யாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 3 வழக்குகள் தொடர்பில் மீண்டும் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நீதித்துறையின் செயற்பாடுகளை அவதானித்தால், எவரையும் பாதுகாக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என்பது மிகத் தெளிவாகப் புலப்படும்.

இந்த நாடாளுமன்றத்தில் தற்போது இருப்பவர்கள் மட்டுமன்றி, தற்போது நாடாளுமன்றத்தில் இல்லாத பலருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

15 முதல் 20 ஆண்டுகள் பழமையான சம்பவங்கள் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை மேற்கொண்டு நாம் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதற்காகச் சற்று கால அவகாசம் தேவைப்படும்.

நாங்கள் தராதரம் பார்த்துத் தீர்மானங்களை எடுப்பதில்லை. சம்பந்தப்பட்ட வழக்குகள் தொடர்பான சாட்சியங்களின் அடிப்படையிலேயே சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம்.

அரசாங்கம் எக்காரணம் கொண்டும் எவரையும் பாதுகாக்காது.

கடந்த கால அரசாங்கங்களில் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொண்டவர்களே, தற்போது அரசாங்கம் நீதித்துறைச் செயல்முறையைச் சரியாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் ‘யாரையாவது பாதுகாக்கிறீர்களா?’ எனக் கேள்வி எழுப்புவது வேடிக்கையானது,” என தெரிவித்தார்.
 

Leave a Reply