வன்னியில் நிலவும் கல்விசார் குறைபாடுளை நேரடியாகப் பார்வையிட்டு உரிய தீர்வை வழங்குக; கடிதத்தைக் கையளித்தார் – ரவிகரன் எம்.பி
இலங்கை
வன்னியில் நிலவும் கல்விசார் குறைபாடுளை நேரடியாகப் பார்வையிட்டு உரிய தீர்வை வழங்குக; பிரதமர் ஹரிணியிடம் ரவிகரன் எம்.பி கடிதத்தைக் கையளித்தார் வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் கல்விசார் குறைபாடுகளை நேரடியாகப் பார்வையிடுவதுடன், குறித்த கல்விசார் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்
ஹரிணி அமரசூரிய அவர்களிடம் கடிதமொன்றினைக் கையளித்துள்ளார்.
குறிப்பாக கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை, முற்றுப்பெறாத மற்றும் கைவிடப்பட்ட பாடசாலைக் கட்டுமானங்கள், இலக்கமுறை இடைவெளி மற்றும் தகவல் தொழில்நுட்ப நெருக்கடி, சுகாதாரவசதிக்குறைவுகளால் பாடசாலைகளில் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள், கற்றல் பெறுபேறுகளிலுள்ள ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட மிகமுக்கியமான குறைபாடுகள் வன்னியில் காணப்படுவதாகவும் அக்குறைபாடுகளை நேரடியாகப்பார்வையிட்டு உடனடியாகத் தீர்வை வழங்குமாறு கோரியே நாடாளுமன்ற உறுப்பினரால் இவ்வாறு பிரதமரிடம் கோரிக்கைக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் 09.01.2025இன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் இக்கடிதத்தைக் கையளித்துள்ளார்.






















