கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் எம்.பி
இலங்கை
கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள மன்னார் – சிலாவத்துறை பிரதேசசெயலாளர்பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தினை விடுவிப்புச்செய்வதுடன், தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்வதற்கு காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராமமக்களை மீள்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியினாலும் பதில் வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
மன்னார் – சிலாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமம் மீள்குடியமர்த்தப்படவேண்டுமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.
அத்தோடு முள்ளிக்குளம் மக்களின் நிலமைகள் தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தினேன். அந்தவகையில் முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த 400வரையான குடும்பங்கள் கடந்ந 1990ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர் என்பதையும், அதன்பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு 300வரையான குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறியதுடன், அதில் 150வரையான குடும்பங்களுக்கு வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தன என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.
இதேவேளை அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் கடந்த 2007ஆம் ஆண்டு முள்ளிக்குளம்கிராம மக்கள் மீளவும் தமது பூர்வீக வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்தபோதிலும் இதுவரை அந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தேன்.
இத்தகைய சூழலில் முள்ளிக்குளம் கிராமமக்கள் அயற் கிராமங்களான காயாக்குழி மற்றும் மலைக்காடு ஆகிய கிராமங்களில் பலத்த சிரமங்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதையும், கடந்த 2002ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது முள்ளிக்குளத்தில் அந்த மக்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகளில் தற்போது கடற்படையினரது குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் குறித்த கூட்டத்தில் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளேன்.
இந்நிலையில் முள்ளிக்குளத்தில் இயங்கிவரும் பாடசாலைக்கும் அங்குள்ள பரலோக மாதா தேவாலயத்திற்கும் மலைக்காடு, காயாக்குழி கிராமங்களில் தங்கியுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்களும், மாணவர்களும் சென்று வருகின்றார்கள் என்பதையும் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தேன்.
இருப்பினும் முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரது ஆக்கிரமிப்பிலுள்ள குடியிருப்புக்காணிகள், தோட்டக்காணிகள், வயற்காணிகள், குளங்கள், கடற்றொழிலுக்காக மீனவர்களால் பயன்படுத்தப்படும் இறங்குதுறைகள் என எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதையும் இதன்போது ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தியிருந்தேன்.
எனவே தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேறுவதற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராம மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியிருந்தேன்.
இந்நிலையில் அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கடற்படை அதிகாரி பதிலளிக்கையில்,
முள்ளிக்குளத்தில் ஒருபகுதிக் காணி மக்களுடைய காணிகள் என தம்மால் அறியமுடிவதாகத் தெரிவித்ததுடன், அந்த மக்களுடைய காணிகளை விடுவிக்கக்கூடிய நிலையிருப்பதாகவும் தெரிவித்தார்.
கூடிய விரைவில் முள்ளிக்குளத்தில் கடற்படையினரின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதுதொடர்பான முடிவுகள் தம்மால் அறிவிக்கப்படுமெனவும் அந்த கடற்படை அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அவ்வாறு மன்னாருக்கு வருகைதரும்போது முள்ளிக்குளம் காணிவிடுவிப்புத் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார் – என்றார்.






















