மன்னிப்புக்கோரி காந்தாரா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரன்வீர்
சினிமா
ரிஷப் ஷெட்டி எழுத்து, இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் காந்தாரா. கன்னடத்தில் வெளியான இப்படம் தென்னியந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மாபெரும் வரவேற்பையும், வெற்றியையும் அடுத்து இதன் தொடர்ச்சியாக 'காந்தாரா சாப்டர் 1' எடுக்கப்பட்டது. இதனையும் ரிஷப் ஷெட்டியே நடித்து, இயக்கியிருந்தார். இப்படம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி உட்பட பல்வேறு நடிகர்கள் கலந்துகொண்டனர். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் கலந்துகொண்டார். விழாவில் ரன்வீர் சிங் காந்தாரா குறித்து பேசியிருந்தார்.
அப்போது, படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் தெய்வம் ரிஷப் ஷெட்டி உடலுக்குள் செல்லும்போது அவர் வெளிப்படுத்திய நடிப்பு அபாரமாக இருந்ததாக கூறிய ரன்வீர் சிங் அதுபோல நடித்தும் காட்டினார். இது ரிஷப் ஷெட்டியின் நடிப்பை கிண்டல் செய்யும் விதமாக இருந்ததாகவும், பெண் தெய்வத்திற்கும், பேய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை எனவும், இந்த செயல் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், இதற்கு விளக்கம் கொடுத்து மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் ரன்வீர் சிங். இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அவர்,
"படத்தில் ரிஷப்-இன் அசுரத்தனமான நடிப்பை ஹைலைட் செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம். ஒரு நடிகராக அந்த குறிப்பிட்ட காட்சியை நடிப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதனை கச்சிதமாக செய்த அவரை போற்றுகிறேன். நம் நாட்டில் பின்பற்றப்படும் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை நான் எப்போதும் மதித்துள்ளேன். நான் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.























