மூடப்பட்ட உணவு வங்கி - கனடாவில் பெண் பாதிரியார் எடுத்த நடவடிக்கை
கனடா
கனடாவில், கட்டுமானப் பணிகளுக்காக தேவாலயம் ஒன்றின் உணவு வங்கி மூடப்பட்டது.
இவ்வளவு நாட்களாக உணவு வங்கியை மட்டுமே நம்பியிருந்த மக்கள் என்ன செய்வார்கள் என யோசித்த அந்த தேவாலயத்தின் பாதிரியாருக்கு ஒரு திட்டம் தோன்றியது!
Scarboroughவில் அமைந்துள்ள Church of the Holy Wisdom என்னும் தேவாலயம் சார்பில் ஒரு உணவு வங்கி இயங்கிவந்தது.
தேவாலயத்தில் அத்தியாவசிய கட்டுமானப்பணி செய்யவேண்டிவந்ததால் அந்த உணவு வங்கி மூடப்படும் நிலை உருவானது.
அப்படியானால், இவ்வளவு நாட்களாக உணவு வங்கியை மட்டுமே நம்பியிருந்த மக்கள் என்ன செய்வார்கள் என்ற கவலை அந்த தேவாலய பாதிரியாரான கெர்லின் ஹென்றிக்கு (Rev. Gerlyn Henry) உருவானது. கெர்லின் இந்திய வம்சாவளியினர் ஆவார்.
ஆகவே, தன் கணவரிடமும், தேவாலய நிர்வாகிகளிடமும் பேசிய கெர்லின் ஒரு முடிவு எடுத்தார்.
அவரது வீட்டில் இருந்த சேமிப்பகம் மற்றும் கார் நிறுத்தும் இடத்திலிருந்த (garage) பொருட்களை எல்லாம் அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தையே உணவு வங்கிக்காக பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்தார் கெர்லின்.
விடயம் என்னவென்றால், ஏற்கனவே அந்த தேவாலய வளாகத்தில் ஒரு உணவு வங்கி இருந்தது. கட்டுமானப் பணிகள் காரணமாக அது மூடப்படும் நிலையில், வேறு எங்காவது கூட உணவு வங்கி திறக்கலாம்.
ஆனால், இவ்வளவு நாட்களாக இந்த உணவு வங்கியைப் பயன்படுத்தியவர்கள் இந்த பகுதியில் உள்ளவர்கள்.
வேறு எங்காவது உணவு வங்கி திறக்கும்பட்சத்தில், அவர்கள் அந்த உணவு வங்கியைத் தேடிச் செல்லவேண்டியிருக்கும். வாகனங்களை பயன்படுத்தவேண்டிய நிலை வரலாம்.
ஆக, இதே வளாகத்திலிருக்கும் தன் வீட்டிலேயே அந்த உணவு வங்கியைத் திறந்தால், உணவு வங்கியைத் தேடி வந்தவர்கள் ஏமாறவும் மாட்டார்கள், அவர்கள் வழக்கம்போல நடந்தே இங்கு வந்து பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஆக, பாதிரியார் கெர்லினுடய யோசனையால், மக்கள் அவருடைய வீட்டின் கேரேஜிலேயே இயங்கும் உணவு வங்கியை தொடர்ந்து பயன்படுத்திவருகிறார்கள்.
வாரம் ஒன்றிற்கு 300 பேர் வரை அந்த உணவு வங்கியைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறார் கெர்லின்.






















