• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவின் பொதுபாதுகாப்பு அமைச்சராக கரி ஆனந்தசங்கரி

கனடா

கனடாவின் புதிய அமைச்சரவையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றிபெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கார்னி 28 அமைச்சர்களை அமைச்சரவை பதவிகளுக்கும், மேலும் 10 பேரை வெளியுறவுச் செயலாளர்களாகவும் நியமித்துள்ளார். பொதுபாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹரி ஆனந்தசங்கரி முன்னதாக பல அமைச்சரவை அமைச்சுபதவிகளை வகுத்துள்ளார்.

இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி கடந்த 2015 ஒக்டோபர் 19 இல் நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக பாராளுமன்றம் சென்றார்.

முன்னதாக சுதேச உறவுகளுக்கான அமைச்சராகவும் 2025 மார்ச் 14 முதல் நீதி அமைச்சராகவும், கனடிய சட்டமா அதிபராகவும் பணியாற்றி வருகிறார்.

கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள்சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

மேலும், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு ஹரி ஆனந்தசங்கரி தெரிவிக்கையில், கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை நான் பெருமையுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கின்றேன்.

டேவிட் மப்பின்டியின் சிறந்த பணியை அடித்தளமாகக் கொண்டு மேலும் கட்டியெழுப்ப ஆர்வமாகவுள்ள அதேவேளை, எமது சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், வெறுப்புணர்வுக் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதற்கும், கனேடியர்களை நாளாந்தம் பாதுகாப்பும் முகாமை அமைப்புக்களை பலப்படுத்தவும் நான் உறுதிபூண்டுள்ளேன்.

முடியரசு - பழங்குடிகள் உறவு மற்றும் நீதி அமைச்சுக்களில் ஏற்பட்ட அர்த்தமுள்ள முன்னேற்றம் குறித்து நான் உண்மையான பெருமிதங்கொண்டுள்ளேன்.

பழங்குடிப் பங்காளிகளுடன் இணைந்து செயற்பட்டு, பலமானதும் மதிக்கப்படுவதுமான உறவுகளைக் கட்டியெழுப்பி, மீளிணக்கத்தை முன்னகர்த்தி, மேம்பட்ட எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாம் கட்டியெழுப்பியுள்ளோம்.

இந்தப் புதிய பணியை நான் பொறுப்பேற்கும் இந்த வேளையில், பிரதம மந்திரி மார்க் கார்ணி என்னில் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நான் நன்றியுடையவனாக இருக்கின்றேன்.

கனடாவை ஒன்றுபடுத்துவதற்கும், பாதுகாப்பைக் கட்டுறுதிப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும், கட்டியெழுப்பவும் எனது அமைச்சரவைச் சகாக்களுடனும் அனைத்து மட்ட அரசுகளுடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராகவிருக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply