
கனடா பிரதமரின் புதிய அமைச்சரவையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் புதுமுகங்கள்
கனடா
கனடா பிரதமர் மார்க் கார்னி நாளை புதிய அமைச்சரவையை நியமிக்க உள்ளார். புதிய அமைச்சரவையில் 50% க்கும் மேற்பட்டோர் புதிய உறுப்பினர்கள் என பிரதமரின் அலுவலகம் (PMO) உறுதிப்படுத்தியுள்ளது.
கார்னியின் புதிய அமைச்சரவை 30 பேருக்கு கீழ்ப்பட்ட மையக் குழுவாகவே அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
கூடுதலாக, 10 செயலாளர்கள் (Secretaries of State) நியமிக்கப்படுவர் எனவும், இவர்கள் இளைய அமைச்சர்கள் போன்று தனித்தனி கோப்புகளை கையாள, முதன்மை அமைச்சர்கள் முக்கிய துறைகளை நயமாக வழிநடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடைமுறை, முன்னர் சில பிரதமர்களால் பின்பற்றப்பட்டாலும், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் வான்கூவர் மாநகர மேயர் கிரேகர் ராபர்ட்சன், வீடு தொடர்பான துறையை பொறுப்பேற்கிறார். முன்னாள் கியூபெக் மாகாண அமைச்சர் கார்லோஸ் லெய்டாவும் பதவி உயர்வு பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவரது துறை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. முதலில் வெளியான தகவல்களில், நீண்டகால அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்டு அமைச்சரவையைவிட்டு விலக உள்ளார் என கூறப்பட்டிருந்தது.
எனினும், தற்போது கிடைத்த புதிய தகவலின்படி, அவர் அமைச்சரவையில் தொடர உள்ளார் மற்றும் நாளைய பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.