நாட்டின் பல பகுதிகளில் வெள்ள அபாயம்
இலங்கை
நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த பல பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (25) இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ மற்றும் அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட ஹடஓயாவின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், மகாவலி நீர் பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் அது தொடர்பான தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திம்புலாகலை, எச்சிலம்பட்டை, ஹிகுராக்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில, தமங்கடுவ, தம்பலகாமம், வெலிகம ஆகிய மகாவலி ஆற்றைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, வெள்ளம் காரணமாக பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை, மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக பல வீதிகளுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், பதுளை, காலி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை இன்று மாலை 04:00 மணி வரை நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, வெள்ள அபாயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையின் 134 மேலதிக நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மோசமான காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.
காலநிலை தொடர்பான அனர்த்தங்கள் குறித்து தெரிவிக்க 117 அவசர இலக்கம், பரீட்சை திணைக்களத்தின் 1911 அவசர இலக்கமும் செயற்பாட்டில் உள்ளன.