• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உத்தியோகப்பூர்வ குடியிருப்புக்களை கையளிக்காத 30 முன்னாள் எம்.பி.க்கள்

இலங்கை

சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய உத்தியோகப்பூர்வ குடியிருப்புகளை இன்னும் ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் வழங்க வேண்டியுள்ள தேவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வீடுகளை காலி செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்றுமுன்தினம் (22) ஏழு எம்.பி.க்கள் தங்களுடைய குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, முன்னாள் எம்.பி.க்கள் குறித்த குடியிருப்புகளை காலி செய்யாவிடின் அந்த குடியிருப்புகளுக்கான நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர அண்மையில் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்கும் வகையில் தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாதிவெல வீட்டுத் தொகுதி புதிய நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 க்கும் மேற்பட்டோர் மாதிவெல வீட்டுத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ வீடமைப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து 40 கிலோ மீற்றர்களுக்குள் வீடு இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் வீடுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த வீடுகள் வழங்கப்படும் என நாடாளுமன்ற சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் 110 வீடுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply