• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாரிய முதலீட்டு வலயங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்

இலங்கை

ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பாரிய முதலீட்டு வலயங்களை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

20 இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் ‘உறுமய’ தேசிய செயற்றிட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 41 ஆயிரத்து 960 பயனாளிகளில் 600
பேருக்கு அடையாள உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு வெல்லவாயவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி  மேலும் தெரிவித்துள்ளதாவது“ மொனராகலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு முழு உரிமையுள்ள காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த காணி உரிமைகளை மக்களுக்கு வழங்க வேண்டாம் என்று சிலர் கூறினர்.

சிலர் நீதிமன்றத்துக்கும் சென்றனர். ஆனால் அவற்றுக்கு முகங்கொடுத்தே இன்று மக்களுக்கு காணி உரிமையை வழங்கியுள்ளோம். இந்தக் காணி உரிமையைப் பெற்றுகொள்வது மாத்திரம் போதாது. அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும்.

எதிர்வரும் 30, 40 வருடங்களில் உலகிற்குத் தேவையான உணவு கிடைப்பது பாரிய பிரச்சினையாக இருக்கும்.
அந்த உணவை வழங்க நாம் தயாராக இருக்க வேண்டும். அதற்கு இந்த மாகாணங்களில் முழுமையான விவசாய முறை உருவாக்கப்பட வேண்டும். ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பாரிய முதலீட்டு வலயங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

அதேபோன்று, சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பிரதேச செயலாளருடன் இணைந்து கொள்ள முடியும்.

இந்த நடவடிக்கைகள் இம்மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். அதிகளவான உறுமய காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள குளங்களைப் புனரமைப்பதற்காக 25 மில்லியன் ரூபாவை வழங்குவேன் என்பதை உறுதியாக கூறுகிறேன்” இவ்வாறு ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply