• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சம்பந்தனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவிப்பு

இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.

இந்நிலையில் அன்னாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கைக்கு சேவையாற்றிய திரு .சம்பந்தன் அவர்களின் மறைவிற்கு இன்று ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம்.

அனைத்து இலங்கையர்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதற்கான அவரது அர்ப்பணிப்பு, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும்.

அவருடைய நேர்மையான மற்றும் நியாயமான தலைமை எனக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும். உண்மையில், இது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கின்றது என எதிா்க்கட்சித் தலைவா் மேலும் குறிப்பிட்டாா்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஆர்.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாருக்கும் எனக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்புக்கள் இனிய நினைவுகளாகும்.  இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க அவர் பாடுபட்டார்.

அன்னாரின் மறைவு இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள அவரது நண்பர்களுக்கு, அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் பாரிய இழப்பாகும் என பிரதமா் நரேந்திர மோடி தொிவித்துள்ளாா்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரங்கல் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் எனது  நீண்டகால அரசியல் நண்பர்.  நாங்கள் இருவரும் பல்வேறு விடயங்கள் தொடர்பில்  கலந்துரையாடியுள்ளோம்.

அவரது மறைவு இலங்கை அரசியலின் சகோதரத்துவத்திற்கு பெரும் இழப்பாகும். அன்னாரின் இழப்பில் இருந்து  அவரது  குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீண்டு வருவதற்கு எனது ஆறுதல்களைத் தெரிவிக்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளாா்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைகின்றேன். அவர் தனது கொள்கைகளில் அசைக்கமுடியாத உறுதி கொண்டவர்.

இந்த இக்கட்டான இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ச இரங்கல் வெளியிட்டுள்ளாா்.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இழப்பு தமிழ்த் தேசிய அரசியல் பரப்புக்கு பேரிழப்பாகும்.

தனது சட்டத் தொழிலை தியாகம் செய்து  மக்களுக்காக தன்னை அரசியலில் ஈடுபடுத்திய பெருமகான் அவர்.

மேலும் தமிழர்களின் மூன்று வகையான போராட்ட காலங்களிலும் தனது அரசியல் சாணக்கியத்தையும், அனுபவத்தையும் பல சந்தர்ப்பங்களில் இராஜதந்திரங்களாக அவர் பயன்படுத்தியிருந்ததை இத்தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் மேலும் தொிவித்தாா்.

தமிழ் பேசும் மக்களின் தலைமகனின் இழப்பு பேரிழப்பாகும் : ஹரீஸ் எம்.பி இரங்கல்.

இலங்கை அரசியலில் இருந்த மூத்த சிறுபான்மை தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் காலமான செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். தமிழ் மக்களின் ஆணிவேராக நோக்கப்படும் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் சட்டத்தரணி இரா. சம்பந்தன் அவர்கள் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானதாக அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது அனுதாப செய்தியில்., சிறுபான்மை மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகளின் போதும் அவருடன் நேருக்கு நேராகவும், தோளோடு தோளாகவும் நின்ற நாட்கள் ஏராளம். தன்னை சார்ந்த இனத்தின் உரிமைகளுக்காக விட்டுக்கொடுப்புக்களோ அல்லது தளர்வுகளோ இல்லாது போராடிய தலைமையை இன்று தமிழ் மக்கள் இழந்திருக்கிறார்கள் என்பதை விட அனுபவமும், ஆற்றலும் கொண்ட சிரேஷ்ட அரசியல் ஆளுமையை இலங்கை தேசம் இழந்திருக்கிறது என்பதே உண்மை.

தம்பி ஹரிஸ், சிறுபான்மை சமூகமான நாங்கள் பிரிந்துவிடக்கூடாது என பாராளுமன்றத்தில் அடிக்கடி என்னிடம் கூறிவந்த அவர் சிறுபான்மை சமூகம் ஒன்றிணைந்து தான் அதிகாரப்பகிர்வு, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அதிகாரம், உரிமைகளை பரஸ்பரமாக விட்டுக்கொடுப்புடன் வெல்ல வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி கூறிவந்தார். முஸ்லிங்களின் அபிலாசைகளையும், சிங்கள மக்களின் உணர்வுகளையும் மதித்த ஒரு தமிழ் தலைமை சம்பந்தன் ஐயா அவர்கள். இவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற சிரேஷ்ட அரசியல் தலைமையான அவரின் காலத்திலையே இனப்பிரச்சினைக்கு தீர்வு வருமென்று நாங்கள் நம்பியிருந்தோம். இவரின் இழப்பினால் தீர்வு சம்பந்தமான இலக்கினை எவ்வாறு அடையமுடியும் என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் தான் சார்ந்த தமிழ் சமூகத்திற்கு அவர் செய்த சேவைகள், பங்களிப்புக்கள் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அவரது இழப்பினால் துயருற்ற அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள், நண்பர்கள், இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எல்லோருக்கும் எனது அனுதாபங்களையும், ஆறுதல்களையும்  தெரிவித்து கொள்கிறேன் என தனது அறிக்கையில் அவா் மேலும் தெரிவித்துள்ளார்.

கொள்கை வேறு- கோட்டை வேறு- ஆனாலும் எமது அஞ்சலிகள்- சம்பந்தனின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ்! 

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வயதில் எமக்கு மூத்தவர், கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் அரசியல் தளத்தில் எம்முடனும் சம காலத்தில் பயணித்தவர்.

முரண்பாடுகள் இருப்பினும் காணும் பொழுதுகளில் அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதுண்டு.

வயது மூப்பின் காரணமாக அவர் மரணித்து விட்ட செய்தி துயரைத் தந்துள்ளது. அவரது இழப்பில் துயருறும்  சகலருக்கும் ஆறுதல் கூறுகின்றேன். அவருக்கு அஞ்சலி மரியாதை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்  கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

 

சம்பந்தனின் மறைவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அனுதாபம் தெரிவிப்பு!

இலங்கைத் தமிழர்களின் பெருந் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

இலங்கையில் தமிழர்களுக்கான இனப்பிரச்சினை விடயத்தில் கண்ணியமாகவும், சமத்துவத்துடனும், நீதியாகவும் தனது அரசியலை முன்னெடுத்துச் சென்ற தலைவா் எனவும் தொிவித்துள்ளாா்.

பல தசாப்தங்களாக அவருடனான தனது பல சந்திப்புகள் மற்றும் உரையாடல்களைஇந்த நேரத்தில் நினைவுபடுத்துவதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினா் மற்றும் ஆதரவாளா்கள் அனைவருக்கும் தனது இரங்கல்களைத் தொிவிப்பதாக தனது எக்ஸ் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.
 

Leave a Reply