• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முல்லைத்தீவில் பறிபோகும் தமிழா்களின் பூர்வீக காணிகள் – ரவிகரன் குற்றச்சாட்டு

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழா்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகள் பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளாா்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 பெரும்பான்மை இனத்தவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவில் ஊடகங்களுக்குத் தொிவித்துள்ளாா்.

அத்துடன், தமிழ் மக்களுக்குச் சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு இணைந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம் ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே பெரும்பான்மை இனத்தவா்களுக்கு வழங்கி, தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும், குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 47455 மொத்த குடும்பங்களும், 140931 மக்கள் தொகையாக காணப்படுகின்றது. இதில் தமிழர்களுடைய பூர்வீக இடங்களில் 4557 குடியமர்த்தப்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்த 12545 பேரும், முஸ்லீம் மக்களாக 1675 குடும்பங்களை சேர்ந்த 6382 பேரும் தமிழ் மக்களாக 41210 குடும்பங்களை சேர்ந்த 121799 பேருமாக காணப்படுகிறார்கள்.

குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு சேர்ந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு 4557 குடும்பங்களில் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கத்தின் அறிவிப்பின்படி 28676 இளைஞர், யுவதிகள் ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பித்திருந்த நிலையில், இன்றுவரைக்கும் அவர்களுக்கான  காணிகள் வழங்கப்படவில்லை என துரைராசா ரவிகரன் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply