• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு விசேட தொழுகை

இலங்கை

ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியாக பல்வேறு இடங்களில் விசேட தொழுகை இடம்பெற்றது.

ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இஸ்லாமியர்கள் தமது புனித பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின்னர் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்து வருவதோடு, உணவு பண்டங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆன்மிக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தனது ஹஜ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் அந்த உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள் என்றும் உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிங்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் ஒரே புனிதத் தலத்தில் கூடி, மனிதகுலத்தின் எதிர்பார்ப்பான சமூகத்தின் ஒருமைப்பாட்டிற்காக இத்தினத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலக மக்கள் அனைவருக்கும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை விதைக்கும் ஹஜ் கொண்டாட்டம், உலக அமைதிக்கான சிறந்த செய்தியையும் தரும் என்பது தனது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மனித குலத்தின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக அனைவரும் ஒரே இலக்கில் ஒன்றுபடும் ஹஜ்ஜுப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு இலங்கை மற்றும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply