• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செம்மணி புதைகுழி வழக்கு மீண்டும் 19ஆம் திகதி விசாரணைக்கு

இலங்கை

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அகழ்வு பணிகளுக்கு தலைமை தாங்கும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனில் குமார் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்த அறிக்கையை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் ஏனைய உரிய தரப்பினருக்கும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்விசாரணைகளின் போது குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இரண்டு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

C-14 கார்பன் பரிசோதனைக்கான மாதிரிகளை மிக விரைவாக அனுப்புவது தொடர்பாகவும், செம்மணி புதைக்குழி சம்பவத்துடன் தொடர்புடைய, ஏற்கனவே சிறைச்சாலையில் உள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இவற்றில், செம்மணி புதைகுழி வழக்குடன் தொடர்புடைய லான்ஸ் கோப்ரல் சோமரத்தின ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

அதேவேளை, C-14 பரிசோதனை மாதிரிகளை அனுப்புவது தொடர்பில் எதிர்வரும் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாகக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி வீ. நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், மனித எலும்புகள் பரிசோதனை தொடர்பான நிபுணர் குழுவின் விபரங்கள் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் பின்னரே மேலதிக ஆய்வுகள் தொடங்கும் என்றும் சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அறியத்தரப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வழக்கு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகக் குழுக் கூட்டத்தின் முடிவுகளை ஆராய்வதற்காக இவ்வழக்கு எதிர்வரும் மாதம் 19 ஆம் திகதி பிற்பகல் 2:30க்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
 

Leave a Reply