6 கோடி சம்பளம் வேண்டாம்... 50 ஏழை குழந்தைகளின் உயிர் காக்க முன்வந்த ராமாயணா பட நடிகர்
சினிமா
திரைத்துறையில் பல வருடங்களாகப் பல்வேறு சவால்களைக் கடந்து மீண்டு வந்த விவேக் ஓபராய், தனது தொண்டு நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் விளம்பரப்படுத்துவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.
பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில், விபீஷணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விவேக் ஓபராய், அப்படத்திற்காக தனக்கு பேசப்பட்ட 6 கோடி ரூபாய் சம்பளத்தை முழுமையாகத் துறந்துள்ளார்.
இந்தத் தொகையைத் தனது சம்பளமாகப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் 50 ஏழைக் குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்காகப் பயன்படுத்துமாறு படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்கோத்ராவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தனது 50வது பிறந்தநாளை ஒட்டி அவர் மேற்கொண்ட இந்த மாபெரும் மனிதநேயச் செயல் சினிமா வட்டாரத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
திரைத்துறையில் பல வருடங்களாகப் பல்வேறு சவால்களைக் கடந்து மீண்டு வந்த விவேக் ஓபராய், தனது தொண்டு நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் விளம்பரப்படுத்துவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். தான் செய்யும் உதவிகள் குறித்துப் பேசும்போது, அது அந்த நற்செயலின் மதிவைக் குறைத்துவிடும் என்று அவர் நம்புகிறார். நிதி ரீதியாக வசதியான நிலையில் இருக்கும் நாம், வறுமையில் வாடும் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதே நமது முதன்மைக் கடமை என்று அவர் தனது சமூக வலைதளப் பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். 'ராமாயணா' படத்தில் நடிப்பது தனக்கு ஒரு வழக்கமான தொழில் அல்ல, மாறாக அது ஒரு உன்னதமான 'சேவை' என்று கூறி அவர் தனது சம்பளத்தை வேண்டாம் என்று மறுத்துள்ளார்.
விவேக் ஓபராய் சம்பளத்தைப் பெற மறுத்த இந்தச் செய்தி ஒருபுறம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதேவேளையில், இப்படத்தில் நடிக்கும் மற்ற முன்னணி நட்சத்திரங்களின் கோடிக்கணக்கான ஊதிய விவரங்களும் வெளியாகி விவாதப் பொருளாய் மாறியுள்ளன. இந்த இரண்டு பாகங்கள் கொண்ட வரலாற்றுத் திரைப்படத்தில் ராமராக நடித்துள்ள ரன்பீர் கபூர் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து மொத்தம் 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இந்தப் படத்தின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக முதலிடத்தில் உள்ளார்.
சீதையாக நடித்துள்ள சாய் பல்லவி ஒவ்வொரு பாகத்திற்கும் தலா 6 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 12 கோடி ரூபாயும், லட்சுமணனாக நடித்துள்ள ரவி துபே ஒவ்வொரு பாகத்திற்கும் 10 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 20 கோடி ரூபாயும் சம்பளமாகப் பெறுகின்றனர். மேலும், ராவணனாக நடித்துள்ள யஷ் இப்படத்தில் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இணைத் தயாரிப்பாளராகவும் களமிறங்கி லாபத்தில் பங்கு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















