• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை

இலங்கை

2026 ஆம் ஆண்டின் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான நான்காவது காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை 1.46 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) பரிந்துரைத்துள்ளது. இலங்கைசுற்றுலா வழிகாட்டி

தேசிய மின் கட்டமைப்பு இயக்குநரகம் (NSO) சமர்ப்பிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவை ஆரம்பகட்டமாக ஆய்வு செய்த பின்னர் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மின்சார விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை 2.88 சதவீதத்தால் அதிகரிக்குமாறு தேசிய மின் கட்டமைப்பு இயக்குநரகம் ஆரம்பத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 4.4 பில்லியன் ரூபா வருமானப் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதே இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த காலாண்டுக்கான மின்சார விநியோகத்தின் மொத்தச் செலவு 157.3 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், மின்சார விற்பனை மூலம் 154 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக, முந்தைய காலப்பகுதியிலிருந்து 1.1 பில்லியன் ரூபா வருமானப் பற்றாக்குறையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், ஆரம்பகட்ட ஆய்வின் பின்னர், முன்மொழியப்பட்ட 2.88 சதவீத கட்டண அதிகரிப்பை 1.46 சதவீதமாகக் குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மின்சார உற்பத்தி நிறுவனமான Electricity Generation Lanka (EGL) சமர்ப்பித்த உற்பத்தித் திறன் செலவுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தியதால் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்ட மேலதிகச் செலவுகளில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வு ஆகியன இந்தக் குறைப்புக்குக் காரணமாக அமைந்துள்ளன.

மேலும், மின்சார உற்பத்திக்கான எதிர்வுகூறல்கள், எரிபொருள் விலைகள், நீர்மின் உற்பத்திக்கான நீர் இருப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்களிப்பு, மின்கல மின் சேமிப்பு கட்டமைப்புகளுக்கான (BESS) செலவுகள் மற்றும் மின்சார விநியோக நிறுவனமான Electricity Distribution Lanka (EDL) சமர்ப்பித்த மேலதிகச் செலவுகள் உள்ளிட்ட விடயங்களும் இந்த மீளாய்வில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நான்காவது காலாண்டில் மொத்த மின்சாரத் தேவை 4,796 ஜிகாவோட் மணித்தியாலங்களாக (GWh) இருக்கும் என தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் கணித்துள்ளார்.

இதில், பிரதான நீர்மின் உற்பத்தி 32.34 சதவீதமாகவும், நிலக்கரி மூலம் கிடைக்கும் மின்சாரம் 25.68 சதவீதமாகவும், ஏனைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களின் பங்களிப்பு 28.81 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பொதுக் கலந்தாய்வு நடவடிக்கையையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் 0770399119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பதிவு செய்துகொள்ள முடியும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
 

Leave a Reply