அமெரிக்கா - கனடா வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தை
கனடா
அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தக உறவுகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் சுமுகமான மற்றும் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டதாக கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்ட பிரதமர் கார்னி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கைக்கான வரைவு குறித்து சமீபத்தில் இடம்பெற்ற ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகவே இந்த உரையாடல் அமைந்ததாகக் குறிப்பிட்டார்.
இப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை இடம்பெற்றதாக கனடிய பிரதமரின் அலுவலகம் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
எமது நாட்டின் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும், குடும்பங்களுக்கான செலவினங்களைக் குறைக்கும், அதேவேளையில் கனடாவின் மொழிகள், கலாச்சாரம் மற்றும் இறையாண்மையை முழுமையாகக் கனம்பண்ணும் வகையில் இந்த வர்த்தக உடன்படிக்கை அமையும் என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கை எட்டுவதற்கு கனடா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் வரும் வாரங்களில் தீவிரமாக உழைப்பார்கள் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவுடன் மிகச் சிறந்த வர்த்தக உடன்படிக்கைக்கான அடிப்படை வரைவு உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கனடாவுடனான வர்த்தகத்தில் கடந்த 70-75 ஆண்டுகளாக நாம் பெருமளவு பணத்தை இழந்து வந்துள்ளோம். எனினும், தற்போது ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிகவும் நெருங்கிவிட்டோம். கனடிய பிரதமருடன் நேற்று மீண்டும் பேசினேன். எமது விவசாயிகள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் வகையிலும், அதேநேரத்தில் கனடாவுக்கும் உகந்ததாக அமையும் வகையிலும் ஒரு நல்ல ஒப்பந்த வரைவு தயாராக உள்ளது" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.






















