• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரைனில் விலங்குகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட கனடிய தன்னார்வலர் பலி

கனடா

உக்ரைனின் கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்தில், போரின் தீவிரத்திற்கு மத்தியிலும் விலங்குகளையும் அவற்றை விட்டு வெளியேற மறுத்த உரிமையாளர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்த கனடாவைச் சேர்ந்த பிரபல நாய் மீட்பு அமைப்பின் நிறுவனர் ஜெஸ்ஸி ஆடம்ஸ் உயிரிழந்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு வான்கூவர் தீவில் 'ரெய்ன்கோஸ்ட் டாக் ரெஸ்கியூ சொசைட்டி' என்ற அமைப்பைத் தொடங்கிய ஆடம்ஸ், இந்த கோடைகாலத்தில் உக்ரைனுக்குத் திரும்பினார்.

முன்னதாக உக்ரைனின் ஒடேசா நகரில் கைவிடப்பட்ட மிருகக்காட்சிசாலையில் இருந்து 9 சிங்கங்களை மீட்க இவர் உதவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 25 அன்று, உக்ரைனை தளமாகக் கொண்ட 'அனிமல் ரெஸ்கியூ கார்கிவ்' என்ற அமைப்புடன் இணைந்து கிரமடோர்ஸ்க் நகருக்கு அருகில் மீட்கப்பட்ட விலங்குகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தபோது எஃப்.பி.வி ட்ரோன் ஒன்று இவர்களின் வாகனத்தைத் தாக்கியது.

வாகனத்தின் முன் கண்ணாடியைத் தாக்கியதில் ஆடம்ஸுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

அவரது மறைவுக்கு உலகளவில் உள்ள பல்வேறு விலங்கு நல அமைப்புகள் அஞ்சலி செலுத்தி வருகின்றன. 
 

Leave a Reply