• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஏவுகணை தாக்குதல்களால் அதிரும் மத்தியக் கிழக்கு - இலக்கு வைக்கப்படும் முக்கிய தளங்கள்

இலங்கை

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

ஏமன் உள்நாட்டுப்போர் ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, ஏமனில் உள்நாட்டுப்போர் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது.

அரசுப்படையினரும், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலின்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் இந்நிலையில், சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

சவுதி அரேபியாவின் ராஸ் தனூரா நகரில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல், நிஜ்ரன் விமான நிலையம், ஹாமிஸ் முஷத் பகுதியில் உள்ள விமானப்படைத்தளம் ஆகியவற்றை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த ஏவுகணைகள் சவுதி வான் பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனாலும், ஏவுகணைகளின் பாகங்கள் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் விழுந்து தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து உடனடியாக கட்டுப்படுத்தபட்டதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.  

Leave a Reply