மூட நம்பிக்கையால் பறிபோன உயிர் - கணவனை பிரிந்து வாழ்ந்த பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த துயரம்
இலங்கை
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்த பெண்ணொருவரின் சடலம், உயிரிழந்து சில நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக மொரகஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போதே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குடா உடுவ, கரகஹதெனிய பகுதியில் வசித்து வந்த 51 வயதானவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, மருதானை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய பின்னர், அவர் பக்கவாதம் போன்ற நோய் நிலைக்கு ஆளாகியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
எனினும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே மத வழிபாடுகளில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் தனது கணவருடன் வசிக்கவில்லை என்றும், மற்றொரு நபருடன் வசித்து வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த இருவரும் மத வழிபாடுகளை மேற்கொண்டு வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் உயிரிழந்து குறைந்தது இரண்டு நாட்களாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், பிரேதப் பரிசோதனைக்காக உடலம் ஹோமாகம மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹேன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






















