கிரிகரி ஏரியின் படகு விபத்து தொடர்பில் உண்மை நிலை வெளிச்சத்திற்கு
இலங்கை
கடந்த 16ஆம் திகதி நுவரெலியா கிரிகரி ஏரியில் நீர்விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் பயணித்த ஜெட் ஸ்கீ படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் கடந்த சில தினங்களாக வெளியான சில ஊடகச் செய்திகளில் காணப்பட்ட விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தும் வகையில், குறித்த படகை செலுத்திய கசுன் லக்மால் மற்றும் கிரிகரி ஏரியில் இயங்கும் படகு சங்கங்களின் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (18) முற்பகல் கிரிகரி ஏரி வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த சம்பவத்துடன் தொடர்புடைய படகோட்டி கசுன் லக்மால், தாம் படகை பாதுகாப்பற்ற முறையில் கவிழ்க்கவில்லை எனவும், படகின் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியானதைத் தொடர்ந்து இரு சிறுவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக தமக்கு வழங்கப்பட்ட பயிற்சிக்கு அமைவாக பாதுகாப்பு நடவடிக்கையாகவே படகை கவிழ்த்ததாகவும் தெரிவித்தார்.
படகோட்டிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது உயிர் பாதுகாப்பு, முதலுதவி, படகு இயக்கம் மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் பயிற்சி வழங்கப்படுவதாகவும், அவசர நிலைமைகளின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்தப் பயிற்சியின்போது அறிவுறுத்தப்படுவதாகவும் கசுன் லக்மால் தெரிவித்தார்.






















