பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு
இலங்கை
பிரித்தானியாவில் சுமார் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர், தென்னாபிரிக்க நாடான எஸ்வத்தினிக்கு மாற்றப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
36 வயதுடைய குறித்த நபர், நீதிமன்ற உத்தரவின் காரணமாக “KP” என்ற பெயரில் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி எஸ்வத்தினியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய காவலில் இருந்த காலப்பகுதியில் அவர் பலமுறை உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு ஒக்டோபரில், டியாகோ கார்சியா அருகே சிக்கலில் சிக்கியிருந்த கடற்றொழில் படகிலிருந்து பிரித்தானிய ரோயல் கடற்படையினரால் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர், பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கு உட்பட்ட டியாகோ கார்சியாவில் தமிழர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடார முகாமில் அவர் பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு குறித்த பிராந்திய நிர்வாகத்தால் அவருக்கு சர்வதேச பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதனால் அவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.
எனினும், பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தாக்கியமை மற்றும் தீ வைக்க முயன்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக அவரை பிரித்தானியாவுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அதிகாரிகள் மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
டியாகோ கார்சியாவில் எட்டு மாதங்கள் சலவை அறையொன்றிலும், இயற்கை வெளிச்சமற்ற காவல்துறை தடுப்புக் கூடத்தில் இரண்டு வாரங்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது தடுப்புக் காவல் நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் கவலை வெளியிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிகளைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு அவர் மருத்துவ சிகிச்சைக்காக பஹ்ரைனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் அவர் மாலைத்தீவுக்கு மாற்றப்பட்ட நிலையில், உயிரிழப்பதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் எஸ்வத்தினிக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய அரசாங்கத்துக்கும் எஸ்வத்தினி அரசாங்கத்துக்கும் இடையிலான ஏற்பாட்டின் அடிப்படையில், அங்கு அவருக்கு நிரந்தரமாக குடியேறும் வாய்ப்பு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், விசா காலாவதியாக இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் அவர் உயிரிழந்தமை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.






















