• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம் - பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை

இலங்கை

பாடசாலை விடுமுறை காலத்தில் பட்டம் விடுவதால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருவதால், குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களும் பெரியவர்களும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரும் ஆலோசகர் வைத்தியருமான டாக்டர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதைய வறண்ட காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக குழந்தைகள் மத்தியில் பட்டம் விடும் பழக்கம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், பாதுகாப்பற்ற முறையில் பட்டம் விடுவது கடுமையான காயங்களுக்கும் சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்பிற்கும் வழிவகுக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

உயரமான இடங்களில் இருந்து பட்டம் விட முயற்சிக்கும் குழந்தைகள் கீழே விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும், குழுவாக பட்டம் விடும் போது ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்வதாலும் விழுவதாலும் விபத்துகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், உயரழுத்த மின்கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தானது என வலியுறுத்திய அவர், பட்டத்தின் நூல் மின்கம்பிகளைத் தொட்டால் மின்சாரம் நேரடியாக அதை பிடித்திருக்கும் நபரிடம் செல்லக்கூடும் என்றார்.

இவ்வாறான மின்சார தாக்குதல்கள் கைகள், தோள்கள் மற்றும் மார்பு பகுதிகளில் உள்ள தசைகள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், சில நேரங்களில் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலையும் உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

மின்சாரத்தை கடத்தக்கூடிய பொருட்களால் தயாரிக்கப்பட்ட பட்ட நூல்கள் உயரழுத்த மின்கம்பிகளுடன் தொடர்பு கொண்டால் உடனடி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய மின்சார தாக்குதல்கள் நிகழக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, மின்கம்பிகள் உள்ள பகுதிகளில் குழந்தைகள் பட்டம் விடுவதைத் தடுக்க பெற்றோர்களும் பெரியவர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

குழந்தைகளின் மகிழ்ச்சி முக்கியமானதுதான் என்றாலும், அவர்களின் பாதுகாப்புக்கும் அதே அளவு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட டாக்டர் ரத்னசேகர, பள்ளி விடுமுறை காலத்தில் பட்டம் விடுவதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
 

Leave a Reply