கினிகத்ஹேனையில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டுச் சென்று விபத்து - சாரதிகள் கைது
இலங்கை
கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரு தனியார் பேருந்துகள், கினிகத்ஹேனை – பெரகொல்ல பகுதியில் ஒன்றையொன்று கவனக்குறைவாக முந்திச் செல்ல முயன்றபோது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
நேற்று (15) இடம்பெற்ற இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக இரண்டு பேருந்துகளிலும் பயணித்த பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இருப்பினும், விபத்தினால் இரு பேருந்துகளும் கணிசமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகக் கினிகத்ஹேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் தற்போது விட்டுவிட்டுப் பெய்து வரும் கனமழை காரணமாக வீதிகள் வழவழப்பாகக் காணப்படுவதால், சாரதிகளைக் கவனமாகவும் மிதமான வேகத்திலும் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இவ்வாறான ஆபத்தான காலநிலை நிலவும் சூழலிலும், பொறுப்பற்ற முறையிலும் அதிவேகமாகவும் வாகனங்களைச் செலுத்திய குற்றத்திற்காக இரு பேருந்துகளின் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகள் இருவரையும் நாளை (17) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கினிகத்ஹேனை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.























