ஜனாதிபதியுடனான சந்திப்பின் முழுமையான காணொளியை கோரும் BASL
இலங்கை
ஆகஸ்ட் 12 அன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் முழுமையான மற்றும் திருத்தப்படாத காணொளிப் பதிவை வெளியிடுமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆகஸ்ட் 14 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றில், இக்கலந்துரையாடலின் ஒரு பகுதி பதிவு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக BASL சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த காணொளியில் கலந்துரையாடலின் ஆரம்பப் பகுதி மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், சில இடங்களில் ஒலித் தெளிவற்ற நிலை காணப்படுவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கிணங்க, தங்கள் பிரதிநிதிகள் குழுவின் அனைத்துக் கருத்துகள், அவதானிப்புகள், பதில்கள் மற்றும் இறுதி உரைகள் உள்ளிட்ட முழுமையான பதிவை வழங்குமாறு BASL கோரியுள்ளது.
அத்துடன், சிறந்த ஒலி மற்றும் காட்சித் தரத்துடன் கூடிய காணொளியை வழங்குமாறும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
BASL-இன் நிர்வாகச் செயலாளர் சுரனி சமரசேகரவின் கையொப்பத்துடன் கூடிய இக்கடிதம் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.






















