• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சூரிய கிரகணத்தைப் பார்த்தவர்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை

முறையான கண்ணாடி இல்லாமல் சூரிய கிரகணத்தைப் பார்த்தவர்களுக்கு சுவிஸ் மருத்துவர்கள் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

புதன்கிழமையன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க உலக நாடுகள் பலவற்றின் மக்கள் ஆர்வம் காட்டிய நிலையில், அவர்களில் பலர் அதற்கான முறையான கண்னாடி அணியாமலே சூரிய கிரகணத்தைப் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், அப்படி முறையான கண்ணாடி இல்லாமல் சூரிய கிரகணத்தைப் பார்த்தவர்களுக்கு சுவிஸ் மருத்துவர்கள் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். 

அதாவது, கண்ணின் பின் புற உள் சுவரிலுள்ள விழித்திரைக்கு வலியை உணரும் திறன் கிடையாது. ஆகவே, விழித்திரைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது உடனடியாக தெரியவராது. பல நாட்களுக்குப் பின்பே விழித்திரை பாதிக்கப்பட்டுள்ளது தெரியவரும்.

ஆக, 99 சதவிகித பாதுகாப்பு இருந்தாலும், ஒரு சதவிகித பாதுகாப்புக் குறைவு இருந்தால்கூட, விழித்திரையின் மையத்திலுள்ள macula என்னும் பாகம் விநாடிகளில் சூரியனால் பாதிக்கப்பட்டுவிடக்கூடும் என்கிறது சுவிஸ் ஃபெடரல் பொது சுகாதார அலுவலகம். 

கண் பார்வை மங்குதல், பார்வையின் மையத்தில் கரும்புள்ளி அல்லது தெளிவற்ற கோடுகள், வண்ணங்களைக் காண்பதில் பிரச்சினை மற்றும் வெளிச்சத்தைப் பார்த்தால் பயங்கரமாக கண் கூசுதல் ஆகிய அறிகுறிகள் தோன்றுமானால், அவை ஆபத்தான அறிகுறிகள் ஆகும். 

சூரிய கிரகணத்தைப் பார்த்ததால் லேசான பாதிப்பு ஏற்பட்டிருந்தாலே, அது குணமாக ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறும் கண் மருத்துவ நிபுணரான மார்ட்டின் (Martin Zinkernagel) என்பவர், சூரிய கிரகணத்தின்போது அதிக நேரம் சூரிய ஒளியைப் பார்த்திருந்தால் நிரந்தர பார்வை இழப்பு கூட ஏற்படலாம் என எச்சரிக்கிறார். 

ஆகவே, சூரிய கிரகணத்தைப் பார்த்த யாருக்காவது மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதாவது இருக்குமானால், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மோசமான செய்தி என்னவென்றால், சேதமடைந்த விழித்திரை செல்களை குணமாக்க எந்த சிகிச்சையும் கிடையாது! 
 

Leave a Reply